செவ்வாய், 1 நவம்பர், 2016

வாழ்வின் அர்த்தங்கள்

பால்கனியின் ஒரு ஓரத்தில் ஈஸி சேரில் அமர்ந்தபடி வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த முதியவர், பக்கத்தில் அமர்ந்து செய்தித்தாளில் மூழ்கியிருந்த மகனிடம் திரும்பி, ஏம்பா, பால்காரன் வந்துட்டானா ? என்றார்.

மகன் எரிச்சலாகி செய்தித்தாளில் இருந்து தலையை வெளியில் எடுத்து, அதான் அப்பவே உன் மருமக காபி கொடுத்தாளே... மறந்துட்டியா ? என்று சொல்லிவிட்டு மீண்டும் பேப்பர் படிக்க ஆரம்பித்தார்.

ஐந்து நிமிடங்கள் அமைதியாக ஓடின. அது ஞாயிற்றுக்கிழமையின் அதிகாலை என்பதால் ரோட்டில் வேடிக்கை பார்க்கவும் சுவாரஸ்யமாக ஏதும் இல்லை. பெரியவர் மீண்டும் உள்பக்கம் திரும்பி, பால்காரன் வந்துட்டானா ? என்று மகனிடம் கேட்டார்.


மகன் கோபத்துடன் செய்தித்தாளை வீசி எறிந்தார். இந்த ஞாபகமறதிக் கிழவனோட மாரடிக்கறதைவிட இன்னைக்கும் ஆபீஸ் போய் தொலைஞ்சிருக்கலாம். காலையிலயிருந்து நாலு தடவை இதே கேள்வியைக் கேட்டா என்ன அர்த்தம்.

உன்னையெல்லாம் எங்கயாவது தலை முழுகிருக்கணும். வீட்டுக் காவலுக்கு ஆள் இல்லையேன்னு வச்சிருக்க வேண்டி இருக்கு..என்றார் சத்தமாக.

முதியவரின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துகள் உருண்டன. அமைதியாக எழுந்து அலமாரியை நோக்கிப் போனார். பழுப்பேறிப் போயிருந்த ஒரு டைரியை எடுத்தார். அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து எடுத்துவந்து மகனிடம் கொடுத்து, படித்துப் பார்.. என்றார்

இப்போது திட்டும் மகனைப் பற்றி, பெரியவர் எப்போதோ எழுதியிருந்த டைரி அது. அம்மா, அப்பா என்று ஒற்றை வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்த மகன், இன்று வார்த்தைகளை கோர்க்கக் கற்றுக் கொண்டான். நாயைக் காட்டி, தன் மழலைக் குரலில், அது என்ன ? என்று கேட்டான். நாய் என்றேன். திரும்பவும், அது என்ன ? என்று கேட்டான். நாய் என்றேன். இருபது முறையாவது அவன் கேட்டிருப்பான். எனக்கு எரிச்சலே வரவில்லை. ஒவ்வொருமுறை அவனுக்கு பதில் சொல்லும்போதும் என் சந்தோஷம் இரண்டு மடங்கானது... - தமிழ் சிறுகதைகள்[வாழ்வின் அர்த்தங்கள்]

நாம் குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்கள் நம் மீது எப்படி அக்கறையாகவும், அன்பாகவும் நடந்துகொண்டார்கள். ஆனால், நாம் ஏன்  அவர்கள் குழந்தையாக மாறிவிடும்போது  அவர்களைப் போன்று இருப்பதில்லை.." ? நமக்கு கோபமும் எரிச்சலும் வருகிறது ஆனால், அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ஏன்  ..? சிந்திக்கவேண்டாமா? நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் அப்படி நடந்து கொண்டால் உங்களையே நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்! இல்லாவிட்டால் உங்களுக்கும் அதே நிலைமை வரும்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comments !