செவ்வாய், 1 நவம்பர், 2016

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே!

வறிய குடும்பத்தில் பிறந்தாலும், நன்றாகப் படிக்கும் சிறுவன் அவன். தோட்டத்தில் காய்கறிகளை விளைவித்து, அவற்றை தலையில் சுமந்து விற்று, அதில் வரும் வருமானத்தில் குடும்பமும் படிப்பும் நடந்தது. காலையில் தெருத் தெருவாகச் சுற்றி விற்றுவிட்டு, அவசரமாக பள்ளிக்கூடம் ஓடுவான்.

ஒருநாள் அப்படி பசியோடு பக்கத்து ஊரில் விற்கும்போது, அவனால் நடக்கவே முடியவில்லை. வெட்கத்தைவிட்டு ஏதாவது ஒரு வீட்டில் சாப்பாடு கேட்கலாம் என்று முடிவெடுத்தான். கொஞ்சம் பெரிதாகத் தெரிந்த வீட்டின் கதவைத் தட்ட, திறந்தது ஒரு இளம்பெண்.

அவளைப் பார்த்ததும் வெட்கத்தில் குரல் வர மறுத்தது. சாப்பாடு கேட்கும் எண்ணத்தைக் கைவிட்டு, கொஞ்சம் தண்ணீர்.. என்றான். அவனது முகத்தில் பசியின் ரேகையைப் பார்த்த பெண், உள்ளே கூப்பிட்டு சாப்பாடு போட்டாள். பதிலுக்கு அவன் காய்கறிகள் தர, அவள் மறுத்தாள். பசியோடு வரும் யாருக்கும் பிரதிபலன் கருதாமல் உணவிடுவது கடமை என்றாள்.


வருடங்கள் உருண்டோட, அவன் இப்போது பக்கத்து நகரத்தின் பிரபல மருத்துவமனையின் தலைசிறந்த டாக்டர். ஒருநாள் விசித்தரமான நோயோடு நடுத்தர வயதுப் பெண்மணி ஒருத்தி அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தாள். அவள் பிழைக்கவே வாய்ப்பு இல்லை என்று மற்ற மருத்துவர்கள் உதட்இடப் பிதுக்கினார்கள். விஷயம் அவன் காதுக்கு வந்தது.

அவளது ஊரைக் கேட்டதும் அவனுக்குள் பொறி தட்டியது... ஓடிப்போய் பார்த்தான். ஆமாம், அவனுக்கு உணவிட்ட அதே பெண்தான் அந்த நோயாளி. தனிப்பட்ட கவனம் எடுத்து அவளைத் தேற்றினான். நம்பமுடியாத அதிசயமாக அவள் பிழைத்தாள். ஆனாலும் அவளுக்குக் கவலை. பெரிய டாக்டர் தனிப்பட்ட கவனம் எடுத்து சிகிச்சை தந்ததால், பில் நிறைய வருமே. எப்படித் தருவது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் சமயத்தில் அவளுக்கு பில் வந்தது. சிகிச்சைக்கான தொகையை, 20 ஆண்டுகளுக்கு முன் எனக்கு சாப்பாடு போட்டீர்கள் என்று எழுதியிருந்த பெரிய டாக்டரை இப்போது அவளால் அடையாளம் தெரிந்து கொள்ள முடிந்தது.

பிரதிபலன் பாராத உதவிக்கும் என்றோ ஒருநாள் பலன் கிடைக்கும். - தமிழ் சிறுகதைகள்[கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே!]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comments !